சிம்புவால் என் படம் தாமதம் ஆனதே கிடையாது : நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி


உதவி இயக்குநராகும் ஆசையில், சிவகங்கையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் சினிமாவில் இருக்கிறார். ராசி படம் தொடங்கி குஷி, ரெட், வில்லன், வரலாறு, காளை, ரேணிகுண்டா என்று பல படங்களை தயாரித்தவர்,

இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்து வருகிறார். இதனையடுத்து மீண்டும் சிம்புவை வைத்து, புதுமுகம் விஜய்சந்தர் இயக்கத்தில் வாலு என்ற படத்தை தயாரிக்கிறார்.

சமீபத்தில் அவரை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது, 30 வருட சினிமா அனுபவத்தில், சினிமா ஒரு நல்ல வளர்ச்சியில் உள்ளது. ஆரோக்கியமாக இருக்கு. நிறைய புதுமுகங்கள் வராங்க, போறாங்க ஆனால் சினிமா அப்படியேத்தான் இருக்கு. படத்திற்கு என்ன தேவையோ அது தான் பட்ஜெட்டை முடிவு செய்யும். மற்றபடி சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று எந்த படத்தையும் பிரிக்க முடியாது.

சிம்புவை வைத்து எப்படி தொடர்ந்து படம் பண்ண முடியுது என்று அவரிடம் கேட்டால், காளை படம் 80 நாளில் முடிந்தது. வேட்டை மன்னன் படம் இடைவேளை வரை முடிந்து இருக்கிறது. சிம்புவிடம் இன்று இத்தனை எடுக்கணும் என்று முன்னாடியே சொல்லிவிட்டால் போதும், அதை அப்படியே முடித்து கொடுத்துவிடுவார். சிம்புவால் என் படங்கள் தாமதம் ஆனதே கிடையாது.

மேலும் நான் அஜித்தை வைத்து நிறைய படங்கள் எடுத்‌தேன். ஆனால் இப்‌போது அவர் பட வியாபாரம் பெரிய அளவில் போய்விட்டது. அதனால் என்னால் முடிந்த அளவிலான பட்ஜெட்டில் படம் எடுத்து வருகிறேன். அதுவே எனக்கு திருப்திகரமாக இருக்கிறது. என் மகனின் 18 வயசு படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்போதெல்லாம் புதுபடங்கள் வருவது அதிகமாகி கொண்டு போவது நல்ல விஷயம் தான். சினிமா எனக்கு ஒரு பேஷன். கடைசி வரை சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.


source : தினமலர்