'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டமில்லை என்று சிம்பு தெரிவித்தார்.


நந்து இயக்கத்தில் சிம்பு, லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'கெட்டவன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்த இப்படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரித்தது. இயக்குநருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக, நந்து சிம்புவை சந்தித்ததாகவும், மீண்டும் 'கெட்டவன்' படத்தை துவங்க இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், நயன்தாராவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது "'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டம் எல்லாம் கண்டிப்பாக இல்லை. தற்போது 'அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். இப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (11/6/2015) சென்னை வந்துவிடுவேன். அதனைத் தொடர்ந்து 'வாலு' வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்க இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.