இணையத்தில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஹெஷ்டேக் ஒன்றை உருவாக்கி தங்களது நடிகருக்கு பிறந்த நாள்
வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள், அதற்கு பதிலடியாக விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஹெஷ்டேக்கை உருவாக்கி விஜய்யை கிண்டல் செய்து வந்தார்கள்.
அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஹெஷ்டேக் இந்தியளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாக ஆரம்பித்தது. ட்விட்டர் பயனீட்டாளர்கள் அனைவரும் இரண்டு ரசிகர்களின் மோதலை விமர்சித்து வருகிறார்கள். இம்மோதல் குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு
உண்மையான தல ரசிகனாக நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எதிர்மறை ஹேஷ் டேகுகளை தவிர்க்க வேண்டும் என்பதே. ஏனெனில், அது நம் நோக்கம் அல்ல. அதேபோல், விஜய் அண்ணா ரசிகர்களுக்கும் நான் முன்வைக்கும்
கனிவான வேண்டுகோள், மற்றவர்களை நைய்யாண்டி செய்து அவர்கள் மனதை புண்
படுத்தக்கூடாது என்பதே. நீங்கள் விரும்பும் நட்சத்திரத்துக்காக நீங்கள் செய்ய விரும்புவது
இத்தகைய செயலைத்தானா...எனவே சிறிய, பெரிய என அனைத்து நட்சத்திரங்களின் விசிறிகளும் தங்கள் அன்புக்குரிய நட்சத்திரை ஆதரிப்பதை மட்டுமே செய்க, மற்றவர்களை தாழ்த்த வேண்டாம். ஒவ்வொரு ரசிகருமே தங்களது நாயகர்களுக்கு ஆதரவாக, மற்றொருவருக்கு எதிராகவும் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்களுடைய ஆற்றலையும், நேசத்தையும் நேர்மறை வழியில் வெளிப்படுத்த வேண்டும். எதிர்மறை வழிமுறை வேண்டாம்.
கிண்டல்களையும், கேலிகளையும் என்னால் பயன்படுத்தி கொண்டு இருக்க முடியும். ஆனால் முதர்ச்சியுடனும், மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அது தான் நம்முடைய இயல்பு. இந்த பிளவு தான் நமது உண்மைத்தன்மையில் இருந்து பிரித்துவிடுகிறது. நாமும் நமது சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். சாதி, மதம், தேசம் இவற்றை எல்லாம் கடந்து மனிதர்களை மதிக்க முதலில் கற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.