என் திருமணம் ஆண்டவன் முடிவு படி நடக்கும் : சிம்பு


சிம்புவின் இரு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதல் காதல் நயன்தாராவுடன் நடந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும் காதல் மலர்ந்தது. அதுவும் சில நாளிலேயே முறிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்ற மன நிலையில் தற்போது சிம்பு இருக்கிறார். 

இந்த நிலையில் இணையதளத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிம்பு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:– எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்கிறார்கள். ஆண்டவன் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும். 

நான் நடித்த ‘வாலு’ படம் ஜூன் 26 அல்லது ஜூலை 3–ந் தேதி ரிலீசாகும். ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. செல்வராகவன் படத்தில் நடிப்பதன் மூலம் அவரிடத்தில் இருந்து நிறைய கற்று வருகிறேன். 

எனக்கு பிடித்த இயக்குனர்கள் சேகர் கபூர், ராஜமவுலி. இந்த வருடத்தில் நான் நடித்த 3 படங்களை ரிலீசுக்கு வர உள்ளன. அஜீத்துடன் இணைந்து நடிப்பீர்களா? என கேட்கிறார்கள். அஜீத் எப்போது என்னை அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். 

தனுசும், நானும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். விஜய் என்னுடைய அண்ணனாகவும் நண்பராகவும் இருக்கிறார். என்னைப்பற்றி எல்லோரும் தவறாக பேசுகிறார்களே? என கேட்கின்றனர். நேரம் நன்றாக இருந்தால் நல்லவிதமாக பேசுவார்கள். 

எனக்கு பிடித்த கதாநாயகி அலியா பட். அப்பா இயக்கத்தில் ‘ஒரு தலை ராகம்’, ‘மைதிலி என்னை காதலி’ எனக்கு பிடித்த படங்கள். சினிமாவில் எல்லா துறைகளும் எனக்கு தெரியும். ஆனால் அரசியல் தெரியாது. 

நான் நடிக்கும் ‘வேட்டை மன்னன்’ படம் கண்டிப்பாக வரும். அதன் டிரைலரை ‘வாலு’ படத்தின் இடைவேளையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சிம்பு கூறினார்.

Source : MAALAIMALAR Daily Evening Tamil News Paper Dated 03-June-2015