டைரக்டர்களுக்கு கைகொடுக்கும் சிம்பு - தினமலர்





குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. அதனால், சினிமாவைப்பற்றிய நிறைய விசயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் கொஞ்சம் விலாவாரியாக கதையை நோண்டுவார். ஆனால், அவர் அப்படி கேட்பதாலே சிலர் அவரது தலையீடு அதிகமாக இருக்கிறது என்று சிம்புவை தவறாக புரிந்து கொள்கின்றனர். இருப்பினும் அந்த நிலை சமீபகாலமாக மாறத் தொடங்கியுள்ளது.  

குறிப்பாக, தன் மீதுள்ள இந்த தவறான கருத்தை மாற்றும் முயற்சியாக, சமீபகாலமாக கதை கேட்பதோடு சரி, கதை பிடித்திருந்தால் ஓ.கே இல்லையேல் அப்புறம் பார்க்கலாம் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார் சிம்பு. அதேசமயம், மற்ற ஹீரோக்களால் கைவிடப்படும் டைரக்டர்களுக்கும் கைகொடுத்து அவர்களை காப்பாற்றுகிறார்.
அந்த வகையில், விஜய், சூர்யாவால் கைவிடப்பட்ட கெளதம்மேனன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி நின்றபோது,சிம்புதான் நான் இருக்கிறேன், உடனே படத்தை ஆரம்பியுங்கள் என்று பெரிய மனதை திறந்து காட்டினார்.
இந்த நிலையில், இன்னொரு முன்னணி இயக்குனருக்கும் கைகொடுத்திருக்கிறார் சிம்பு. அவர் வேறு யாருமல்ல, இரண்டாம் உலகம் படத்தை இயக்கிய செல்வராகவன். ஆர்யா-அனுஷ்கா என மெகா கூட்டணியை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் அப்படத்தை இயக்கினார். ஆனால், படம் படுத்து விட்டதால் அடுத்து அவரது தம்பி தனுஷ்கூட அவருக்கு கால்சீட் தர முன்வரவில்லை. 

ஆனால், இதுபற்றி சிம்புவிடம் சொன்னபோது உடனே ஒத்துக்கொண்டாராம். கெளதம்மேனனுக்கு கைகொடுத்தது போல் தனக்கும் அவர் தரக்கூடும் என்ற ஒரு சிறு நம்பிக்கையில்தான் அவரிடம் பேசினாராம் செல்வராகவன். ஆனால், அவருக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும் வகையில் உடனே நடித்துத்தருவதாக கால்சீட் கொடுத்து விட்டாராம். 

ஆக, டைரக்டர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கும் ஆஸ்தான ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்.