இது வழக்கமான சிம்பு அதாங்க எஸ்.டி.ஆர். படமல்ல... வித்தியாசமான எஸ்.டி.ஆர்., படம் என்று கேப்ஷனே போடலாம்! "போடா போடி" படம் மொத்தமும், அத்தனை வித்தியாசம், விறுவிறுப்பு! காதல் படம் தான் என்றாலும் "போடா போடி" இதுவரை கண்டிராத காதல் கலாட்டா படம்!
கதைப்படி லண்டனின் சித்தப்பா வீட்டில் வசித்தபடி அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கும் சிம்புவுக்கும், அதே லண்டனில் சல்சா நடனத்தில் சாதிக்க வேண்டுமென அந்த நடனத்தை கற்றபடி துடிக்கும் வரலெட்சுமி சரத்குமாருக்கும் இடையே ஒரு சின்ன சந்திப்பில் பெரிய காதல் பிறக்கிறது! அந்த காதல் ஒத்துவருமா, வராதா...? எனும் தருவாயிலேயே இருவருக்கும் கல்யாணமும் நடந்தேற அதன்பின் நடக்கும் சுவாரஸ்யங்களையும் சோகங்களையும் முற்றிலும் புதுமையாக ஏழெட்டு எபிசோட்டுகளாக தனித்தனி டைட்டில் கொடுத்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் "போடா போடி" குழுவினர்! அதில் ஒரு எபிசோட்டின் டைட்டில் கல்யாணமாம் கத்திரிகாயாம் என்பதில் இருந்தே அந்த ஏழெட்டு எபிசோட்களும் படமும் எத்தனை சுவாரஸ்யம் என்பது புரிந்து கொள்ள வேண்டும்!!
டி.ஆர்., உள்ளிட்டவர்களைக்கூட டயலாக்கில் தாளித்தபடி செம கேஷூவலாக தன் காதலை சொல்லும் எஸ்.டி.ஆர்., ஹீரோவாக படத்தின் பெரிய ப்ளஸ்!
ஹீரோயின் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அப்பாவை மிஞ்சுகிறார். சல்சா நடனகலைஞராக செம க்யூட், குரல்தான் சிம்புவுக்கு அக்கா மாதிரி தெரிகிறது. மற்றபடி டபுள் ஓ.கே.,! வி.டி.வி. கணேஷ், ஷோபானா உள்ளிட்டவர்கள் படத்தின் பெரியபலம்! டங்கனின் ஒளிப்பதிவு, தரண்குமாரின் இசை உள்ளிட்ட பள்ஸ் பாயிண்டுகள், புதியவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்திற்கு பக்கபலம்!
ஆக மொத்தத்தில் "போடா போடி" புதுமையாக கதை சொல்லும், அதுவும் காதல் கதை சொல்லும் முறையை தமிழ் சினிமாவிற்கு "வாடா வாடி" என அழைத்து வந்திருக்கிறது! ரசிகர் - ரசிகைகளையும் அவ்வாறே அழைக்கும் என நம்பலாம்!