சிம்பு, பரத் நடிப்பில் வெளியான வானம்

நடிகர்கள் எஸ்டிஆர், பரத், சந்தானம், பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, சரண்யா, சோனியா அகர்வால், வேகா, வி.டி.வி. கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
கமெராமேன் ஞான சேகர், நீரவ் ஷா, இசை யுவன்சங்கர் ராஜா, கலை ரெம்பொன், எடிட்டிங் ஆண்டனி, சண்டை பயிற்சி சில்வா, நடனம் இயக்குனர் அகமத் கான், காயத்ரீ ரகுராம், பாடலகள் முத்துகுமார், சிலம்பரசன் பி.ஆர்-ஜான்சன்.
இப்படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷ்-ஆர்.கணேஷ். க்ளவுட் நைன் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சிம்பு, சந்தானம், பரத், வேகா, பிரகாஷ் ராஜ், சோனியா அகர்வால், அனுஷ்கா, சரண்யா இவர்கள் வாழ்க்கை பிரச்சினையை சந்தித்து அல்லாடுகிறார்கள். பற்றி எரியும் பயங்கரமான மைய புள்ளியில் இவர்கள் இணையும் போது என்ன நடக்கிறது என்பதை படபடப்போடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் க்ரிஸ்.
தெலுங்கில் 'வேதம்' என்ற பெயரில் வெளியான இப்படத்தை சில மாற்றத்தோடு தமிழில் 'வானமாக' தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். ரோக் இசையில் இணைந்த இளமை ஜோடி பரத், வேகா காதல் உணர்வில் திடுமென வில்லன்கள் நுழைந்து கலவரம் செய்கிறார்கள். பணக்கார காதலியை மடக்க சிம்பு தன் நண்பன் சந்தானத்துடன் இணைந்து திட்டம் தீட்டி சிரிக்க வைக்கிறார்கள்.
காதலிக்கு செலவு செய்ய சிம்பு திருடவும் துணிகிறார். பழமையான பலான தொழிலில் இருந்து விலகி தன் தோழியுடன் வேறு பிழைப்பை தேடுகிறார் அனுஷ்கா. தனது உடன்பிறப்பை சோனியா உடன் தேடி அலைந்து பொலிசிடம் சிக்கி விவகாரத்தில் மாட்டித்தவிக்கிறார் பிரகாஷ் ராஜ். சிறுவனை காப்பாற்ற சரண்யாவும் முதியவரும் முயற்சிப்பது பெண்களை உருக வைக்கும்.
பயங்கரமான வேடத்தில் வந்து மிரட்டுகிறார் ஜெயபிரகாஸ். யுவன் இசையில் தொடக்கத்தில் வரும் பாடல் படத்தின் கதையை ரசிகர்களுக்கு உணர்த்தும் அர்த்தமுள்ள பாடலாக நிற்கிறது. அனுஷ்காவும், சிம்புவும் இணைந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை சூடேற்றுகிறார்கள். இன்றைய இளசுகளுக்காக வாழ்க்கை தத்துவ பாடலை கவிஞர் சிம்பு தீட்டியிருக்கிறார்.
யுவன் துள்ளல் இசையில் 'எவன்டி உன்னை பெத்தான்' பாட்டு ஆட்டம் போட வைத்து ஒன்ஸ் மோர் கேட்க வைக்கிறது. சிம்புவின் மின்னல் நடனம் ரசிகர்களை உலுக்கி எடுக்கிறது. ரசிகர்கள் எளிதாக யூகிக்கும்படியாக சில காட்சிகள் அமைந்துள்ளன. வழக்கமான பாணியிலிருந்து விலகி மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சிம்பு, பரத் இருவரையும் பாராட்டலாம்.
முக்கியமான கதாபாத்திரங்களை திரைக்கதையில் நகர்த்தி, தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை பயன்படுத்தி அழுத்தமான செய்தியை 'வானம்' படத்தின் மூலமாக இயக்குனர் க்ரிஸ் சொல்லியிருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சி ரசிகர்களின் இதயதுடிப்பை அதிகமாக்கும்.