குறளரசன் இசையமைத்திருக்கும் 'இது நம்ம ஆளு' படத்தின் ஒரு பாடலை விரைவில் வெளியீட நடிகர் சிம்பு திட்டமிட்டு இருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து வருகிறார். 'வாலு' படத்தைத் தொடர்ந்து 'இது நம்ம ஆளு' வெளியிடும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் இசையமைப்பாளர் குறளரசன் இருவருக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மோதல் உருவானது. இம்மோதல் குறித்து சிம்பு எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருக்கிறார்.
இது குறித்து சிம்புவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, "பாண்டிராஜ் மற்றும் குறளரசன் இருவருக்கும் இடையே உருவான மோதல் குறித்து சிம்பு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர் என்ன கூறினாலும், தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, அமைதி காக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
மேலும், 'இது நம்ம ஆளு' படத்துக்காக குறளரசன் இசையமைத்திருக்கும் பாடல்களில் ஒரு பாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்" என்று தெரிவித்தார்கள்.
-தி இந்து