சோதனையும், நெருக்கடியும் இனி இல்லை: சிம்பு மகிழ்ச்சி!




'வாலு' பட விவகாரத்தில் ஏற்பட்ட சோதனைகளும், நெருக்கடியும் தம்மை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

'
வாலு' பட பிரச்னை தொடர்பாக டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில், சிம்பு தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், " 'வாலு' படத்தை வெளியிட எனது தந்தை உரிமம் பெற்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு தந்தையாக மட்டுமே அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு புகழ்பெற்ற இயக்குநர் - தயாரிப்பாளர் என்ற முறையிலும் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் மிகவும் விரும்பினார். அதனாலேயே இந்த முடிவை எடுத்தார்.

இம்மாத மத்தியில் 'வாலு' படத்தை வெளியிட முடிவு செய்தோம். படம் தொடர்பான பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சரி செய்து வந்தோம். ஆனால், தற்போது வேறு ஒரு தரப்பும் படத்தை வெளியிட உரிமை கோரியுள்ளது.

ஒரு நடிகனாக எனது கடமையை செய்துவிட்டேன். எனது ரசிகர்கள் போலவே நானும் படத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல் செய்ய சிலர் மறைமுகமாக சதியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தருணத்தில், எனது ரசிகர்களின் அன்பும், வாழ்த்தும், ஊடகங்களின் ஆதரவும் எனக்கு பெரும் பலத்தை தருகின்றன. இந்த பலத்துடனும், இறை நம்பிக்கையுடன் படத்தை நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியும் என நான் நம்புகிறேன். சோதனைகளும், நெருக்கடியும் அதிகரித்தால் அது நம்மை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்றே அர்த்தம்" என்று தெரிவித்திருக்கிறார்.