ஏழைச் சிறுவனின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு நிதியுதவி: தந்தையின் நெகிழ்ச்சிப் பேட்டி - The Hindu
"என் மகன் அசுவத்தாமன் தற்போது நன்றாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிம்பு சார்தான்" என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுவனின் மருத்துவச் செலவை நடிகர் சிம்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அச்சிறுவன் நன்றாக இருப்பதாக தகவல்கள், புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்த ஒரு நிலைத்தகவலை ரீ-ட்விட் செய்தார். சிம்புவின் இந்த நல்லெண்ண நடவடிக்கை, அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
உண்மையில் என்ன தான் நடந்தது, என்பதை அறிய அசுவத்தாமனின் தந்தை சண்முகத்தினைத் தொடர்பு கொண்டு பேசினேன். தனது மகனுக்கு சிம்பு செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"எனது பெயர் சண்முகம். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனது மகன் அசுவத்தாமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஆனால், வலி குறையவில்லை என்றவுடன் திருவண்ணாமலையில் பெரிய மருத்துவமனையை அணுகினோம்.
சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள இலவச பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்று கூறி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள்தான் பண உதவிகள் செய்து வந்தார்கள். ஆனால், பணம் அதிகம் தேவைப்பட்டது.
எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபனுக்கு இரவு 11:30 மணிக்கு போன் செய்து எனது மகன் பற்றிய விவரங்களை கூறினேன். 12:30 மணிக்கு என்னை சிம்பு அழைத்தார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சிம்புவே ராமச்சந்திரா மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்களுக்கு போன்செய்து, அவரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். அவனை பார்க்கும்போது எல்லாம் சிம்பு செய்த உதவி தான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.
சந்தானம் சாரும் கொஞ்சம் உதவிகள் செய்தார். எனது மகனுக்கு அதிகமான உதவிகள் செய்தது சிம்பு சார் தான். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் எல்லாம் சொல்லிவிட முடியாது.
மருத்துமனையில் இருந்து சிம்பு சாரைப் பார்க்க எனது மகனை அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், வேறு ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவர் பேசியவுடன் கண்கள் குளமாக நின்றுக் கொண்டிருந்தேன்" என்றார்.