முதலில் சிம்பு அப்புறம் அஜித் - தி இந்து ‎





அஜித்தை இயக்கும் முன்பு சிம்புவை வைத்து ஒரு படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கெளதம் வாசுதேவ் மேனன். 

ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த சிம்புவை அப்படியே மாற்றி, அவருக்கு ஒரு புது அடையாளத்தினை கொடுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 

அஜித், விஜய், சூர்யா என தொடர்ச்சியாக கெளதம் மேனன் இயக்குவதாக இருந்த படங்கள் டிராப்பானது. அச்சமயத்தில் அஜித் அவரை அழைத்து தனது அடுத்த படத்தினை இயக்குமாறு வாய்ப்புக் கொடுத்தார். 

 'ஆரம்பம்' படத்தின் வியாபாரத்தை மட்டும் வைத்து, ஏ.எம்.ரத்னம் பணச்சிக்கலில் இருந்து மீளமுடியாது என்பதால், கெளதம் மேனன் - ஏ.எம்.ரத்னம் இணையும் படத்தில் அஜித் நடித்து தரவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

 'வீரம்' படம் முடிவடைந்தவுடன், காலில் ஆபரெஷன் செய்துக் கொண்டு சுமார் 7 மாதங்கள் ஒய்வு எடுக்க இருக்கிறார் அஜித். அதனைத் தொடர்ந்தே கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. எனவே, கௌதம் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியது இருக்கும். 

இச்சமயத்தில் தான் கெளதம் மேனனுக்கு கை கொடுத்திருக்கிறார் சிம்பு. மொத்தமாக தன் கால்ஷுட்டை ஒதுக்கிக் கொடுத்து, நவம்பர் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு எனக் கூற, இப்போது கெளதம் மேனன் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறதாம். 

அதுமட்டுமன்றி சூர்யாவுக்காக அமைத்த கதையில், சிம்புவிற்காக சிறிய மாற்றங்களைச் செய்து படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு மார்க் கோனிக்ஸ் என சூர்யா படத்திற்காக ஒப்பந்தம் செய்த டீம்மை அப்படியே இப்படத்திற்காக உபயோகிக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன். 

 6 மாதத்தில் சிம்பு படத்தினை முடித்து வெளியிட்டு விட்டு, அஜித்தை இயக்கலாம் என்று கெளதம் மேனன் முடிவு செய்திருக்கிறாராம்.