''பொண்ணு
அழகா இருக்காளேனு ஆசைப்படுறதுக்கு பேர் காதல் இல்லை; நம்ம வாழ்க்கையை
அழகாக்குவானு நம்பவைக்கிறதுதான் காதல்'’ - இப்படி
படம் முழுக்க சிம்பு ஸ்பெஷல் பன்ச்தான். திரும்பிப் பார்த்தா சமீபத்தில் தமிழ் சினிமாவுல காதல்
சினிமா வரவே இல்லை. சாப்பிட, தூங்க மறந்தாலும்
காதலிக்க மறக்காதவங்க நாம. அதான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காதலும்
காதல் சார்ந்த விஷயங்கள் மட்டுமே இருக்கணும்னு பிளான் பண்ணி அடிச்சிருக்கோம். செம வெயிட்டான காதல்
பொக்கேவா படம் இருக்கும்'' - அடித்துப்
பேசுகிறார் 'வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர்.
பிரசித்திபெற்ற 'சிம்பு
- ஹன்சிகா காதல்’ தருணங்களை
உடன் இருந்து பார்த்தவர்.
''டிரெய்லர் பரபர பட்டாசா இருந்துச்சுனு
ஏகப்பட்ட லைக்ஸ், கமென்ட்ஸ்.
படம் அதைவிட சூடா இருக்கும்.
சிம்பு அடிப்பார்னு நினைக்கும்போது அடிக்கமாட்டார்; அடிக்க
மாட்டார்னு நினைக்கும்போது அடி தூள் கிளப்புவார். ரொம்ப சிம்பிளா
சொல்லணும்னா, கிட்டத்தட்ட
ரஜினி சார் படம் மாதிரி இருக்கும்.
அந்த அளவுக்கு சிம்பு ஹீரோயிசம்,
காமெடி, ரொமான்ஸ், டான்ஸ்,
சென்ட்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து
புறப்பட்டிருக்கோம். சிம்புவைப்
பிடிக்காதவங்களுக்கும் இந்தப் படத்தில் அவரைப் பிடிக்கும்!''
''பில்ட்-அப்
நல்லாத்தான் இருக்கு. ஆனா,
அதுக்காக படம் ரிலீஸ்
ரெண்டு வருஷமாவா தாமதம் ஆகும்?''
''நம்புங்க... அதுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான்
காரணம். கேமராவுக்கு முன்னாடியும்
பின்னாடியும் ஏகப்பட்ட சிக்கல்கள்.
ஹைதராபாத் ரயில்வே
ஸ்டேஷன்ல செட் போட்டு ஒரு மாஸ் ஃபைட் எடுக்கணும். கம்பிகளை
உடைச்சு சண்டை நடக்கும்.
அதுக்கான திட்டம் என்ன, எங்கேலாம்
பொக்லைன் பயன்படுத்துவாங்க, அடிவாங்குறவங்க
எந்த அளவுக்குப் பறப்பாங்கனு மொத்த ப்ளூபிரின்ட்டும் கொடுத்து,
ரயில்வேல அனுமதி வாங்கினோம். ஆனா, அந்த நேரம்தான் ஹைதராபாத்தில் குண்டு
வெடிச்சது. அதனால மூணு மாசம் அனுமதி தரலை. வேற ரயில்வே ஸ்டேஷன்ல ஷூட்
பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, படம்
முழுக்க வரும் அந்த ஸ்டேஷன்லதான்
சண்டைக் காட்சியும் இருக்கணும்னு காத்திருந்து படம்பிடிச்சோம்.
இப்போ ரஷ் பார்க்கிறப்போ
அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இருக்குனு தோணுது. இப்படி பல காரணங்களால் பட ரிலீஸ் தாமதம் ஆச்சு.
ஆனா, அதுக்காக
மேக்கிங்ல எந்தச் சமரசமும்
பண்ணிக்கலை!''
'வாலு’ ஷூட்டிங்லதான்
சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, படம்
ரிலீஸ் ஆகுறதுக்குள்ள பிரிஞ்சிட்டாங்களே?''
''படத்துக்கு வெளியே எப்படினு தெரியலை.
ஆனா, படத்துல
சிம்புவும் ஹன்சிகாவும்
நிஜமான காதலர்கள் மாதிரியே வாழ்ந்தாங்க. 'மேட்
ஃபார் ஈச் அதர்’ ஜோடினு
தைரியமா சொல்லலாம். மத்தபடி காதல்,
பிரிவு எல்லாம் அவங்க பெர்சனல். நிஜ வாழ்க்கையில் சிம்புவும்
ஹன்சிகாவும் காதலிச்சுட்டு இருந்தப்ப
படத்துக்காக காதல் காட்சிகளைப் படம் பிடிச்சுட்டு இருந்தோம்.
அதேமாதிரி நிஜத்தில்
அவங்க பிரிஞ்சிருந்தப்ப, படத்திலும்
எமோஷனல் காட்சிகளைப் படம்பிடிச்சுட்டு
இருந்தோம். ஏதோ ஒருவிதத்தில் ரீலும் ரியலும் ஒரே அலைவரிசையில இருந்தது. நிஜத்துல
சிம்புவும் ஹன்சிகாவும் திரும்ப
சேர்வாங்களானு படம் பார்த்தா,
உங்களுக்கே தெரியும்!''
''சிம்புவுடன் காதல் தோல்வியால் ஹன்சிகா இந்தப்
படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்கனு ஒரு தகவல் வந்ததே உண்மையா?''
''அப்படியெல்லாம் இல்லை. ஹன்சிகா ரொம்ப
டெடிகேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நான்
முதல்முறை படம் பண்றேன்னு நிறையத் தடவை எனக்காக கால்ஷீட்
தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணினாங்க.
ஆனா, எதிர்பார்க்காத
சிக்கல்களில் சிக்கிட்டு அடுத்தடுத்து
படப்பிடிப்பு கேன்சல் ஆச்சு. அதனால ஹன்சிகா வேற படங்களில்
நடிச்சுட்டு இருந்தப்ப, நாங்க எங்க படத்துக்காக தேதி கேட்டோம்.
அப்போ அவங்களால ஒருநாள்கூட
ஒதுக்கித் தர முடியலை. 'என்
கால்ஷீட் இருந்தப்பலாம் வேஸ்ட்
பண்ணிட்டீங்க. ஆனா,
நான் ஆசைப்பட்டாலும் இப்போ என்னால தேதி கொடுக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. அது ரொம்ப நியாயமான கோபம்தான். எனக்கும் கஷ்டமாத்தான்
இருந்தது. ஆனா, அப்புறம்
எப்படியோ தேதி அட்ஜஸ்ட் பண்ணி, பாங்காக்ல
ஷூட் பண்ண டூயட்டுக்கு வந்து நடிச்சுக்கொடுத்தாங்க!'
''ரியல்
காதல், பிரிவு பத்தி சிம்பு எதுவும் ஷேர் பண்ணிக்கிட்டாரா?''
''அவரின்
முதல் காதலி சினிமாதாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டா எல்லா கவலைகளையும்
மறந்துட்டு செம ரேஸிங்ல இருப்பார். அந்த எனர்ஜிதான் சிம்பு ப்ளஸ்.
அதே எனர்ஜியோடு எல்லாரையும் கலாய்ப்பார். அவரோட அந்த
ஜாலி கேலி தாங்காமதான், 'உயிரைக்
கொடுத்து லவ் பண்றவனைப் பார்த்திருக்கேன்; ஆனா, உயிரை
எடுத்து லவ் பண்றவனை இப்பத்தான் பார்க்கிறேன்’னு ஒரு பன்ச் பிடிச்சார்
சந்தானம்!''